ஃப்ளாட் அல்லது ரூம் மேட் உடன் வசிப்பவர்களுக்கு எப்போதும் ஏதேனும் ஒரு சச்சரவுகள் இருந்துக்கொண்டே இருக்கும். நல்ல புரிதலோடு இருக்கும் ரூம் மேட் என்றால் ஓகேவாகவே இருக்கும். ஆனால் ஒத்தே வராதவர்களுடன் கட்டாயத்தின் பேரில் தங்க வேண்டும் என்றால் சற்று கடினமாகத்தான் இருக்கும்.
அப்படியான சம்பவம் குறித்த பதிவுதான் தற்போது ட்விட்டர் தளத்தில் வைரலாகி நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. அதில் ரக்ஷித் பவேஜா என்பவர் பகிர்ந்திருந்த ட்வீட்டில், “என் ஃப்ளாட் மேட்’டிடம் மீதியிருக்கும் சாப்பாட்டை எடுத்து ஃப்ரிட்ஜில் வைக்கச் சொல்லியிருந்தேன். காலையில் எழுந்து பார்த்த போது இப்படி இருக்கிறது. குட் மார்னிங்” எனக் கேப்ஷன் இட்டு சாப்பாடும் பருப்பு சாம்பார் இருந்த குக்கர் மற்றும் தவாவை ரக்ஷித்தின் ஃப்ளாட் மேட் அப்படியே ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்திருந்த ஃபோட்டோவையும் பகிர்ந்திருக்கிறார்.
இந்த பதிவை கண்ட ட்விட்டர் பயனர்கள் பலரும் பலவிதமான விமர்சனங்களை கருத்துகளை தெரிவித்திருக்கிறார்கள். அதில், “இதுதான் சிறந்த வழி. இப்படியே வைத்தால்தான் ஃப்ரிட்ஜில் இருந்து மீண்டும் எடுத்து சாப்பாட்டை சூடு செய்வதற்கு எளிமையாக இருக்கும். இல்லையென்றால் அதற்கு தனியாக பாத்திரம் செலவாகும்” என ஒரு பயனர் குறிப்பிட, அதற்கு ரக்ஷித், “நீங்களும் என் ரூம் மேட்டும் தான் ஒன்றாக வசிக்கவேண்டும்” என நக்கல் செய்திருக்கிறார்.
இதுபோக, ஃப்ரிட்ஜில் குக்கரோடு வைத்தது குறித்து வாக்கெடுப்பு நடத்தலாம் எனக் குறிப்பிட்டு , ‘இது சரியானது’ என்றும், ‘முட்டாள்தனமானது’ என்றும் இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டு Poll நடத்தப்பட்டிருக்கிறது. அதில் 59% பேர் சரியானது என்றும், 40% பேர் முட்டாள் தனமானது என்றும் வாக்களித்திருக்கிறார்கள்.
ரக்ஷித்தின் இந்த ட்வீட் தொடர்ந்து வைரலாக நெட்டிசன்கள் பலரும், “பாத்திரங்களை கழுவ யோசித்தால் ஃப்ரிட்ஜில் அப்படியே குக்கர், தவாவுடன் வைத்தால் முறையான கூலிங் உணவுக்குள் செல்லாமல் பூஞ்சை ஏற்படும். இதனால் உடல் ஆரோக்கியமே கெடும்” என பதிவிட்டிருக்கிறார்கள்.