டிரெண்டிங்

ஆளுநர் மாளிகையை இன்னொரு தலைமைச் செயலகமாக்க முயற்சி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

ஆளுநர் மாளிகையை இன்னொரு தலைமைச் செயலகமாக்க முயற்சி: ஸ்டாலின் குற்றச்சாட்டு

webteam

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்து, ஆளுநர் மாளிகையை மற்றொரு தலைமைச் செயலகமாக உருவாக்க முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள மடலில், இந்தியாவுக்கே வெகுமானமாகத் திகழும் மாநில சுயாட்சிக் கொள்கையைத் தந்த தமிழகத்தில்,அந்த கொள்கையை துறந்து ஆட்சி நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் கைப்பிடி கயிற்றுக்கு ஏற்ற வகையில், ஈபிஎஸ் - ஓபிஎஸ் என இரட்டைத் தலை கொண்ட ஆட்சியில் உள்ள அனைத்து அமைச்சர்களும் செயல்படுகின்றனர்.

கேரளா, கர்நாடகாவில், அந்தந்த மாநில மொழிகளை கட்டாயம் படிக்க வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டு வரும் இந்த காலத்தில், பிறமொழி பேசும் மாணவர்களுக்கு சலுகை என்ற பெயரில், தமிழகத்தில் தமிழைப் படிப்பதற்கு விலக்கு அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளராக ஆர்.ராஜகோபால் நியமிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் உள்ளது. ஆளுநர் மாளிகையை இன்னொரு தலைமைச் செயலகமாக உருவாக்கும் நோக்கமே இந்த நியமனத்தில் வெளிப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் மானத்தை காக்க திமுக தொண்டர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.