டிரெண்டிங்

கைவிட்ட மகள்கள்.. சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டி - மருத்துவமனையில் மரணம்..!

கைவிட்ட மகள்கள்.. சாலையில் மயங்கி விழுந்த மூதாட்டி - மருத்துவமனையில் மரணம்..!

webteam

தேனியில் வசித்த மகள்களால் கைவிடப்பட்ட மூதாட்டி சாலையில் மயங்கி விழுந்து, பின்னர் சிகிச்சையில் உயிரிழந்தார்.

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தின் மாலம் பகுதியை சேர்ந்தவர் குருவிளா. இவர் தமிழக பொதுப்பணித்துறையில் தேனி மாவட்டம் வைகை அணை உதவியாளராக பணியாற்றினார். இவரது மனைவி பிலோமினா (86). இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் லக்ஸி. திருமணம் முடித்து அரூரில் இருக்கிறார். இரண்டாவது மகள் பிரின்ஸி, திருமணமாகி கேரள மாநிலம் கோட்டயத்தில் இருக்கிறார்.

கடந்த 1981ஆம் ஆண்டு தனது கணவர் இறந்தபின், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடியிருந்த ஃபிலோமினாவிற்கு கணவர் பணியாற்றிய வைகை அணை பூங்காவில் துப்புறவு பணி வழங்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் மூதாட்டிக்கு காலில் ஒரு புண் ஏற்பட்டு அது ஆறாமல் இருந்துள்ளது. இதுகுறித்து அரூரில் உள்ள இளைய மகளிடன் தெரிவித்தபோது, அங்கு மருத்துவ வசதி இல்லை என்றும், கோட்டயத்தில் உள்ள மகளிடம் சென்றால் அங்கு சிறந்த வைத்தியம் கிடைக்கும் எனவும் தட்டிக்கழித்துள்ளார். மூத்த மகள் வைத்தியம் பார்க்க தயங்குவதை உணர்ந்த ஃபிலோமினா, கால் வலியோடு கையில் இருந்த கொஞ்சம் பணத்தோடு கோட்டயம் பஸ் ஏறியுள்ளார்.

அங்கு இளைய மகளை சந்தித்துள்ளார். இளைய மகளோ தாயாரை கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுமதித்து விட்டு, கையில் ரூ.500-ஐ கொடுத்துவிட்டு கிளம்பியுள்ளார். அதற்குப்பின் மருத்துவமனைக்கு வரவோ, தாய் எப்படி இருக்கிறார் என பார்க்கவோ இல்லை. இளைய மகளும் தன்னைக் கவனிக்க தயங்குவதை உணர்ந்த மூதாட்டி, காயம் குறைந்ததும் கோட்டயம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளார். தன்னை ஒதுக்கிய இளைய மகள் வீட்டிற்கு செல்ல விரும்பாமல் நேராக பெரியகுளம் செல்ல முடிவெடுத்தார்.

கொரோனா முடக்கம் தளர்வுகள் அமலுக்கு வந்ததும் காய்கறி உள்ளிட்ட வண்டிகளைப் பிடித்து இடுக்கி மாவட்டம் குமுளி வந்துள்ளார். குமுளியில் மீண்டும் பெரியகுளத்தில் உள்ள தனது வாடகை வீட்டிற்கு செல்ல நினைத்தபோது, தேக்கடி லூர்தன்னை தேவாலயத்தின் அருகே மூதாட்டி மயங்கி விழுந்துள்ளார். மூதாட்டி குறித்து தேவாலயத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட, மாவட்ட ஆட்சியர் தினேஷன் உத்தரவுப்படி ஃபிலோமினா குமுளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உடல் நலம் தேறியதும் அவரை அழைத்து செல்லவும் தேனி மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்திருந்தது.

இந்நிலையில் குமுளி மருத்துவமனையில் இருந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வயது மூப்பு காரணாமாக உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்னும் இரண்டு நாட்களுக்குள் உறவினர்கள், மகள் யாரும் வரவில்லை என்றால், குமுளி ஊராட்சி நிர்வாகம் சார்பில் மூதாட்டியின் உடல் அடக்கம் செய்யப்படும் என போலீஸார் கூறியுள்ளனர்.