நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், முதலமைச்சருக்கு அவதூறு ஏற்படுத்தும் விதமாகவும் சேலத்தில் துண்டுபிரசுரம் விநியோகித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உள்பட டிடிவி தினகரன் ஆதரவாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலத்தில் கடந்த 30 ஆம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. அன்றைய தினம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், டிடிவி தினகரன் ஆதரவாளருமான வெங்கடாசலம், தாதகாப்பட்டி பகுதியில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பான நோட்டிஸ் விநியோகித்தார். அந்த துண்டுபிரசுரத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், முதலமைச்சருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையிலும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதுதொடர்பாக அதிமுகவினர் அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்தப்புகாரின் அடிப்படையில் அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடாசலம், எஸ்.கே. செல்வம் உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் வெங்கடாசலம் உள்ளிட்ட 3 பேரை அன்னதானப்பட்டி காவல் நிலையத்தினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வெங்கடாசலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக மாநகர செயலாளராக டிடிவி தினகரனால் அறிவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.