டிடிவி தினகரன் குக்கர் சின்னம் வழங்க கோரிய மேல் முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இதனையடுத்து சமீபத்தில் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, தனக்கு தேர்தலில் குக்கர் சின்னத்தையே ஒதுக்க வேண்டும் என டிடிவி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆனால் குக்கர் சின்னத்தை ஒதுக்க இயலாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டிடிவி தினகரன் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பதில் அளித்த தேர்தல் ஆணையம், டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்க முடியாது எனத் தெரிவித்தது.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என்பதால் குக்கர் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க முடியாது எனத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பொதுப்பட்டியலில் உள்ள ஒரு சின்னத்தை தனிப்பட்ட கட்சிக்கு உரிமை கோர முடியாது எனவும் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
இந்நிலையில் இருதரப்பு வாதங்களும் நிறைவுற்ற நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.