18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதியின் தீர்ப்பு தங்களுக்கு பின்னடைவு அல்ல என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்ட தங்கத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி சபாநாயகரால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பளித்தது.
இதையடுத்து வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இதனை அடுத்து இந்த வழக்கை நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்து வந்தார். விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று காலை 10.30 மணியளவில் வழங்கப்பட்டது.
18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று 3வது நீதிபதி சத்தியநாராயணன் தீர்ப்பு அளித்துள்ளார். சபாநாயகர் உத்தரவில் எவ்வித தவறும் இல்லை. சபாநாயகரின் உத்தரவு சட்டவிரோதமானது அல்ல என்று அவர் கூறியுள்ளார்.
தீர்ப்பு குறித்து டிடிவி தினகரன் கூறுகையில், “அரசியலில் பின்னடைவு என்பதே கிடையாது. இதுஒரு அனுபவம் தான். மேல்முறையீடா? அல்லது தேர்தலை சந்திப்பதா? என்பது குறித்து 18 பேருடன் ஆலோசித்து அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும். இடைத்தேர்தல் நடந்தால் 20 தொகுதிகளிலும் அமமுக வெல்லும். 18 எம்.எல்.ஏக்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுதான் அடுத்தக்கட்ட நடவடிக்கை.
நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதியிடம் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால், அதற்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. தீர்ப்பு எப்படி வந்தாலும், கலந்து பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவே எல்லோரும் ஒரே இடத்தில் இருக்கின்றனர். புஷ்கரணி விழாவில் கலந்து கொள்வது என்பது அவர்கள் எடுத்த முடிவு. இன்று மாலை நானும் குற்றாலம் செல்ல உள்ளேன். இந்த தீர்ப்பு எங்கள் சட்டமன்ற உறுப்பினர்களை மேலும் ஒற்றுமைப்படுத்தும்” என்றார்.