எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னை நந்தனத்தில் கோலகலமாக இன்று மாலை கொண்டாடப்படவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆகியோருக்கு அழைப்பிதழ் அனுப்ப்பபட்டது. மேலும், அழைப்பிதழில் அவர்களின் பெயரும் இடம் பெற்றது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதில்லை என ஏற்கெனவே தெரிவித்துவிட்டார்.
இதனையடுத்து கோவை விமான நிலையத்தில் அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக தொண்டர்கள் இல்லாத இயக்கம் எனவும், அதிமுகவில் இருந்த உயிரோட்டமான தொண்டர்கள் அமமுகவிற்கு இடம் பெயர்ந்து விட்டனர் எனவும் தெரிவித்தார். ஆட்சி, அதிகாரம் வைத்து கொண்டும், இரண்டு நாளைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து, சுற்றுலா செல்லலாம் என வாகனத்தில் மக்களை ஏற்றி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கு அழைத்து சென்று தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக காட்ட முயற்சிக்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார். மேலும் அரசு நிகழ்ச்சி வழக்கப்படி அழைப்பிதழில் சட்டமன்ற உறுப்பினரான தன் பெயரை சேர்த்துள்ளனர். ஆனால், ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கவில்லை என அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து அமமுகவின் பிளேக்ஸ், பேனர்களை காவல்துறை அகற்றுவது கேவலமாக உள்ளது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பிளேக்ஸ்,பேனர்களை அகற்ற வேண்டுமென்ற உயர் நீதிமன்றம் உத்தரவை கேட்பார்களா என கேள்வியும் எழுப்பினார். பின் நீதிமன்றம் சொல்லியும் ஹெச்.ராஜா, எஸ்.வி.சேகரை தமிழக அரசு கைது செய்யவில்லை என தெரிவித்தார். அமைச்சர் பதவி இருப்பதால் ஆர்.பி.உதயகுமார் போன்றோர் மேதாவிகள் போல பேசுகின்றனர். அமைச்சர் பொறுப்பில்லை எனில், யாரும் அவரை சீண்டமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட டெபாசிட் வாங்காது என்பதை சவாலாக கூறுகிறேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.