டிரெண்டிங்

“கர்நாடக எம்எல்ஏக்கள் கடத்தல்” - மக்களவையில் திரிணாமுல் நோட்டீஸ்

“கர்நாடக எம்எல்ஏக்கள் கடத்தல்” - மக்களவையில் திரிணாமுல் நோட்டீஸ்

rajakannan

கர்நாடக எம்.எல்.ஏக்கள் கடத்தப்பட்டது தொடர்பாக விவாதம் நடத்த திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்துள்ளது.

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? கவிழுமா என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் நேற்று காலை 11 மணியளவில் சட்டப்பேரவை கூடியது. அப்போது தன் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்து முதலமைச்சர் குமாரசாமி பேசினார். தமது ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா தீவிரமாக இருப்பதாக அப்போது அவர் குற்றஞ்சாட்டினார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதில் ஆளும் கட்சி தாமதம் செய்வதாக குற்றஞ்சாட்டிய பாஜகவினர், வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என வலியுறுத்தினர். 

நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என பாஜகவினர் ஆளுநரை சந்தித்து முறையிட்ட நிலையில், நேற்று மாலைக்குள் நடத்துமாறு சபாநாயகரை ஆளுநர் கேட்டுக்கொண்டார். அதே நேரத்தில் ஆளுநரின் வேண்டுகோளுக்கு எதிராக பேரவையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்ட நிலையில், அவை இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.

பாஜக எம்.எல்.ஏக்கள் இரவு முழுவதும் பேரவையிலேயே தங்கி தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் அனைவரும் பேரவையிலேயே உறங்கினர். இன்று காலை மீண்டும் கர்நாடக சட்டசபை கூடும் நிலையில், பாஜக எம்.எல்.ஏக்களுடன் சட்டப்பேரவை வளாகத்திலே எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென கூறி மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. திரிணாமுல் எம்.பி சவுகடா ராய் இந்தத் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்.