ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி வெங்கநாயக்கன் பாளையம் கல்ராமணி குட்டையில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சத்தியமங்கலம் அருகே மாதம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெங்கநாயக்கன் பாளையத்தில் கல்ராமணி குட்டை உள்ளது. இந்த குட்டை அண்மையில் தூர் வாரப்பட்டதால் நீர் தேங்கும் வகையில் ஆழப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை அப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் கல்ராமணி குட்டையில் மழைநீர் தேங்கியுள்ளது. நீண்ட நாள்களுக்கு பிறகு குட்டையில் நீர் தேங்கியதால் கொரோனா விடுமுறையால் வீட்டில் இருந்த பள்ளி மாணவர்கள் குட்டையில் குளிக்கச் சென்றனர்.
இந்நிலையில் குட்டையில் குளிக்கச் சென்ற சத்தியமூர்த்தி என்பவரின் மகன் மௌலீஸ்வரன் (13), ரெங்கநாதனின் மகன் திலீப்குமார் (12), மற்றும் ஜீவானந்தன் (14) ஆகியோர் உடைகளை கழற்றி கரையில் வைத்துவிட்டு குட்டையில் குளித்துள்ளனர். அப்போது 3 பேரும் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கினர்.
அப்போது குட்டை அருகே விவசாய பணியில் இருந்த கிராம மக்கள் குளித்துக் கொண்டிருந்த மாணவர்கள் மாயமானது குறித்து கிராமத்துக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த கிராம மக்கள் மாணவர்களை தேடியபோது மௌலீஸ்வரன் மற்றும் திலீப்குமார் ஆகியோரின் உடல் கரை ஒதுங்கியது. மாயமான மற்றொரு மாணவர் ஜீவானந்தத்தின் உடலை 2 மணி நேரத்துக்கு பின் தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த புன்செய் புளியம்பட்டி போலீசார் இறந்த மாணவர்களின் உடலை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.