உரிய முகாந்திரம் இல்லாமல் குற்றச்சாட்டுக்களை கூறி வரும் நடிகர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்காது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் இன்று பேசிய ஜெயக்குமார், “குற்றச்சாட்டுக்களை தெரிவிப்பதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளது. நீதிமன்றம் உள்ளது. லஞ்ச ஒழிப்பு துறை உள்ளது. எல்லா வழிமுறைகளையும் விடுத்து கமல்ஹாசன் கற்பனையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். குணா கதாபாத்திரத்திலேயே கமல் இருக்கிறார். மலிவான விளம்பரத்தை தேடும் கமலின் நோக்கத்தை ஏற்க முடியாது. யாருடைய கைப்பாவையாக கமல் செயல்படுகிறார் என்பது வெளிப்படையாக தெரிகிறது” என்று கூறினார்.
மேலும், அரசு மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை கூறினால் பொறுத்துக் கொள்ள மாட்டோம். நாங்கள் அனைவரும் உப்பு போட்டு சாப்பிட்டு வருகிறோம். எங்களுடைய எதிர்வினையை காண்பிப்போம். குற்றச்சாட்டு நிரூபிக்காவிட்டால் அரசு சார்பில் வழக்கு தொடரப்படும் என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.
கமல்ஹாசன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின், அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆக வேண்டும். மக்களே நடுவராக வேண்டும். விழித்தெழுவோம்.. தயவாய்” என்று குறிப்பிட்டு இருந்தார்.