மத்தியில் உள்ள மதவாத ஆட்சியை அகற்றும் வல்லமை ராகுல் காந்திக்கு உள்ளது என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி போட்டியின்றி தேர்வாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் நாடு முழுவதும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளான இன்று வரை, ராகுல் காந்தியை தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து வரும் 16ஆம் தேதி ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கிறார்.
இதுதொடர்பாக புதிய தலைமுறையிடம் பேசிய திருநாவுக்கரசர், “அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கு, தமிழக காங்கிரஸின் சார்பாக வாழ்த்துகள். தற்போது மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மதவாத ஆட்சியை அகற்றும் வல்லமை படைத்த தலைவர் ராகுல் காந்தி மட்டும்தான். கடந்த 20 ஆண்டுகளாக காங்கிரஸை மத்தியில் ஆட்சிக்கு கொண்டுவர சோனியா காந்தி அரும்பாடுபட்டார். அவரின் ஆதரவோடும், கட்சி நிர்வாகிகளின் ஆதரவோடும், மக்கள் மற்றும் தொண்டர்களின் ஆதரவோடும் தற்போது ராகுல், காங்கிரஸ் தலைவராகியுள்ளார். மக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை இந்திய அளவில் கொண்டுவந்து, மத்தியில் ஆட்சி மாற்றத்தை ராகுல் கொண்டுவருவார். எந்த மாநிலத்தில் யார் தலைவராக வரவேண்டும் என்பதை ராகுல் முடிவு செய்வார். புதியவர்கள், இளைஞர்கள் மற்றும் அனுபவமுள்ளவர்களுக்கு ராகுல் வாய்ப்பளிப்பார். ராகுல் தலைவரானாலும் காங்கிரஸை என்றென்றும் சோனியா காந்தி ஆலோசனை கூறி வழிநடத்துவார். அவர் காங்கிரஸ் மற்றும் இந்தியாவின் தாய்” என்று கூறினார்.