டிரெண்டிங்

காவிரிக்காக மதுபானக் கடையை மூடலாம்: திருநாவுக்கரசர் யோசனை

காவிரிக்காக மதுபானக் கடையை மூடலாம்: திருநாவுக்கரசர் யோசனை

webteam

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடையை மூட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் யோசனை தெரிவித்துள்ளார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ஐ.பி.எல். போட்டிக்கு யாரும் கட்டாயப்படுத்தி அழைத்து செல்லப்படுவதில்லை, காவிரி உணர்வு உள்ளவர்கள் விருப்பப்பட்டால் போகாமல் இருப்பது அவரவர் விருப்பம் என்று தெரிவித்தார். ஐ.பி.எல்.போட்டியை நிறுத்துவதை விட, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடையை மூட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

பின்பு உச்சநீதிமன்றம் தீர்ப்பை மத்திய அரசு மதித்து ஆணையிட்ட பிறகு கர்நாடக அரசு மதிக்கவில்லை என்றால் நானே போய் கர்நாடக முதல்வர் சீத்தாராமையாவிடம் முறையிடுவேன் என்று கூறியவர், நாளை தமிழகம் வரும் பிரதமருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கறுப்பு உடை அணிவது, இல்லங்களில் கறுப்புக்கொடி ஏற்றுவது என்ற முடிவை காங்கிரசின் தோழர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவர், கர்நாடகாவிற்கு ஆதரவாகவோ, தமிழகத்திற்கு எதிராகவோ ராகுல் காந்தி எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.