எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு வரத்தயாராக இருந்த எம்எல்ஏக்களை கடத்திச் சென்று ஒளித்து வைத்தவர்கள் ஒழிக்கப்படுவார்கள் என அம்மா அணியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம்சாட்டி உள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூரில் அதிமுக அம்மா அணி சார்பில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய டிடிவி தினகரன் ‘இது நமது ஆட்சி. இந்த ஆட்சிக்கு எந்தக் காரணத்தைக் கொண்டும் பங்கம் வராது. ஆட்சி செய்பவர்களுக்கு மடியிலே கணம் உள்ளது. ராணுவ கட்டுப்பாட்டுடன் ஜெயலலிதா நடத்தி வந்த இந்த இயக்கத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
தலைமை பதவி, பொருளுக்கு ஆசைப்படாமல் கழகம்தான் பெரிது என்று நினைத்த ஒரே காரணத்தில்தான் சட்டமன்ற உறுப்பினர்களும், எம்பிகள் சிலரும் இங்கு வந்திருக்கிறார்கள். இந்த விழாவிற்கு வரத் தயாராக இருந்த இன்னும் இரண்டு மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை கடத்திக் கொண்டு சென்றிருக்கிறார்கள். கேவலம். நமது ஆட்சியிலே எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவிற்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்களை ஒளித்து வைத்திருக்கிறார்கள். அப்படி ஒளித்து வைத்திருப்பவர்கள் ஒழிக்கப்படவேண்டும் என்று கூறினார்.
மேலும், இன்று ஆட்சியில் இருப்பவர்களை யார் கொண்டு வந்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும் என்று தெரிவித்த தினகரன், கூவத்தூரில் எம்எல்ஏக்களை ஒன்று சேர்த்திருக்காவிட்டால் இந்த ஆட்சி இப்போது நடக்குமா? எனக் கேள்வி எழுப்பினார்.