திருப்பத்தூரில் சிசிடிவி கேமராக்களை உடைத்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த போதை கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் வைத்தீஸ்வரன் என்பவரின் வீட்டின் ஜன்னலை உடைத்த திருடன் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். அது பலன் அளிக்காததால் உருட்டுக்கட்டை மூலம் சிசிடிவி கேமராவை அடித்து உடைத்து சென்றுள்ளார். இதனை அடுத்து சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சிகளை கொண்டு போலீசார் தேடிவந்தனர்.
இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளில் வாணியம்பாடி கூஜா காம்ப்ளக்ஸ் பகுதியில் உள்ள முகமது இம்ரான் என்பவரின் பர்னிச்சர் கடையில் ரூ.45 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் வெளியே பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திருடப்பட்டன. இதுதொடர்பாக கொள்ளை நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, திருடனை தேடி வந்தனர்.
இந்நிலையில் வாணியம்பாடி புதூர் ரயில்வே பாலம் அருகே பதுங்கியிருந்த திருடன் நஜீம் என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணை மேற்கொண்டதில் நஜீம் போதைக்காக தினந்தோறும் பிளம்பர் வேலை செய்பவர்கள் பயன்படுத்தும் சொல்யூஷனை வாங்கி நுகர்ந்து வந்துள்ளார். அதை வாங்க பணம் தேவை என்பதால், போதை தலைக்கேறிய பின்னர் தெருத்தெருவாக சுற்றி கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். காவல்துறையினரிடம் நஜீம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.