இளங்கோவன் தனது எதிர்காலத்தை பற்றி முடிவு செய்யட்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர், "பஞ்சாயத்து செய்ய வேண்டிய நிலையில் முதல்வர் உள்ளதாகவும், அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கட்சி உடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். 50 ஆண்டுகள் பொது வாழ்விலும், பல பொறுப்புகளில் கட்சியிலும் இருந்து ஏகமனதாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்டாலின் குறித்து அமைச்சராக ஒரு தகுதியை வைத்துக்கொண்டு தரம் தாழ்ந்து பேசுவது ஏற்புடையதில்லை” என்றார். மு.க. ஸ்டாலினிற்கு திமுக தலைவராகும் தகுதியில்லை என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறிய கருத்திற்கு கண்டனம் செய்யும் நோக்கில் இதனை தெரிவித்தார்.
மேலும் சண்டையிட்டால் தான் வீழ்த்த முடியும் என்றும் பாஜக ஏற்கனவே வீழ்ந்துதான் உள்ளதாகவும் தமிழகத்தில் இப்போதும், எதிர்காலத்திலும் அதற்கு வாய்ப்பே கிடையாது என்று மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் கருத்துக்கு பதிலளித்தார். மக்களவைத் தேர்தலில் 40 தொகுதியிலும் வெற்றிப்பெருவோம் என பொள்ளாச்சி ஜெயராமன் கூறி இருந்ததற்கு, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களையும் சேர்த்து 80 தொகுதியிலும் வெற்றிப்பெருவோம் என சொல்லட்டும். ஆனால் அதற்கு வாய்ப்பு கிடையாது என சாடிய அவர், நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் பார்த்துக் கொள்வதாகவும், இளங்கோவன் அவர் எதிர்காலத்தை பற்றி முடிவு செய்யட்டும் என்றும், அவர் இப்படி பேசுவது வழக்கமானது என்றார்.