வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் எந்த அரசியல் காரணமும் இல்லை என இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா தெரிவித்துள்ளார்.
இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா இயக்குநராக இருக்கும் 6 நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் 5 நாட்கள் சோதனை நடத்தினர். அதேபோல், இளவரசியின் மற்றொரு மகளான ஷகிலாவிற்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனைகளில் பல்வேறு முக்கிய ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக வருமானவரித்துறையினர் இளவரசியின் மகள்களுக்கு சம்மன் அளித்தனர். இதன்பேரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வருமானவரித்துறை அலுவலகத்தில் கிருஷ்ணப்ரியா தனது கணவருடன் ஆஜரானார். அதேபோல், ஷகிலாவும், கணவருடன் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
வருமான வரித்துறையினரின் விசாரணைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணப்ரியா வருமான வரித்துறை சோதனையில் எந்த அரசியல் காரணமும் இல்லை என்று கூறினார்.