ஓசூர் வேட்பாளர் ஜோதிக்கு ஆதரவாக அவரது கணவர் பாலகிருஷ்ணரெட்டி பரப்புரை செய்ய தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1998-ஆம் ஆண்டில், ஓசூர் அருகே நடந்த போராட்டத்தின் போது பேருந்துகள் மீது கல்வீசி தாக்கிய வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன்றம் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சமீபத்தில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்த பாலகிருஷ்ண ரெட்டி, சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்துச் செய்யக் கோரி, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால், சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கவோ, நிறுத்தி வைக்கவோ முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.
இதனையடுத்து சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ண ரெட்டி, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரது தண்டனைக்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனைத்தொடர்ந்து ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானது. இங்கு வரும் மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் அங்கு அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி போட்டிடுகிறார்.
அதிமுக சார்பில் ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜோதிக்காக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பரப்புரை செய்வதற்கு தடை கோரி அமமுக சார்பில் போட்டியிடும் புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அதில், தன்னை வேட்பாளர் போல் முன்னிறுத்தி மனைவியுடன் பாலகிருஷ்ண ரெட்டி பரப்புரை செய்வதாகவும் தகுதி இழந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பரப்புரையில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ஓசூர் வேட்பாளர் ஜோதிக்கு ஆதரவாக அவரது கணவர் பாலகிருஷ்ணரெட்டி பரப்புரை செய்ய தடையில்லை என உத்தரவிட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிதுவ சட்டம், தேர்தல் நடத்தை விதிமுறைகள்படி பிரச்சாரம் செய்ய எந்தத் தடையும் இல்லை எனக்கூறி புகழேந்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.