மக்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முதல் நாளான நேற்று தமிழகத்தில் 20 பேர் மனுத்தாக்கல் செய்தனர். அதிகபட்சமாக வட சென்னை தொகுதியில் நான்கு வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகள் உட்பட மொத்தம் 97 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய வருவோர், 4 பேருக்கு மேலாக வரக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வரும் 26ம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை 27ம் தேதி நடைபெறும்.
வேட்பு மனுக்களை திரும்பப் பெற 29ம் தேதி வரை அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முதல் நாளான நேற்று தமிழகத்தில் 20 பேர் மனுத்தாக்கல் செய்தனர். அதிகபட்சமாக வட சென்னை தொகுதியில் நான்கு வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
சென்னை தெற்கு தொகுதியில் 3 பேரும், திருப்பூர், ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் தலா இரண்டு பேரும் மனு தாக்கல் செய்தனர். தருமபுரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட தொகுதிகளில் தலா ஒருவர் என தமிழகத்தில் நேற்று மொத்தம் 20 பேர் மனுத்தாக்கல் செய்தனர்.
புதுச்சேரியில் ஒருவர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதே போல், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக பெரம்பூர், திருவாரூர் தொகுதிகளில் தலா ஒருவர் என மொத்தம் இரண்டு பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.