டிரெண்டிங்

சாதியால் எதிர்ப்பு : காதலித்து கைவிட்ட காதலனை போராடி சிறைக்கு அனுப்பிய இளம்பெண்

சாதியால் எதிர்ப்பு : காதலித்து கைவிட்ட காதலனை போராடி சிறைக்கு அனுப்பிய இளம்பெண்

kaleelrahman

ஓமலூர் அருகே பட்டியலின வகுப்பை சேர்ந்த பட்டதாரி இளம்பெண்ணை காதலித்து ஏமாற்றியதாக கூறி காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டார். காதலன் அவருடைய தாய் தந்தை உள்ளிட்ட மூன்று பேரை சாதிய வன்கொடுமை சட்டப் பிரிவின் கீழ் தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள நடுப்பட்டி ஊராட்சியில் உள்ள எலத்தூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் என்பவரின் மகள் சசிபிரியா. பொறியியல் பட்டதாரியான இவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரது மகன் பொறியியல் பட்டதாரியான கிரிசங்கரும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து இவர்களின் திருமணத்திற்கு சசிபிரியாவின் வீட்டில் சம்மதம் தெரிவித்த நிலையில் கிரிவாசன் வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். சசிபிரியா பட்டியலின சமூகத்தை சேர்ந்த பெண் என்பதால், வேறொரு வகுப்பை சேர்ந்த கிரிசங்கரின் குடும்பத்தார் மகனை இங்கிருந்து உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், கிரிசங்கரின் தாய் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சசி பிரியாவின் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்து தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்ற சசிபிரியாவை அக்கம் பக்கத்தினர் காப்பாற்றியுள்ளனர்.

இந்தநிலையில், காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்து வரும் கிரிசங்கரின் வீட்டிற்கு சென்ற சசிபிரியா, வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனது காதலனை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதை அறிந்த தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சசி பிரியாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், காதலனை சேர்த்து வைக்கும் வரை போராட்டத்தை கைவிடமாட்டேன் என்று கூறியுள்ளார். அதனால், போலீசார் புகார் கொடுக்குமாறு அறிவுறுத்தியதை தொடர்ந்து கிரிசங்கர் காதலித்து திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியதாகவும், அவரது தாய் தந்தை இருவரும் தனது வீட்டிற்கு வந்து சாதிப்பெயரை சொல்லி திட்டியதாகவும், இவர்கள் 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில் தீவட்டிப்பட்டி சப் இன்ஸ்பெக்டர் காமராஜ், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து காதலன் கிரிசங்கர், மற்றம் அவரது தந்தை ராஜா, தாய் ரபிஷா ஆகிய 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.