டிரெண்டிங்

டிடிவி தினகரனிடம் நான் ஏன் பெட்டி பாம்பாக அடங்க வேண்டும்? - தங்க தமிழ்செல்வன் ஆவேசம்

டிடிவி தினகரனிடம் நான் ஏன் பெட்டி பாம்பாக அடங்க வேண்டும்? - தங்க தமிழ்செல்வன் ஆவேசம்

webteam

டிடிவி தினகரனிடம் பெட்டி பாம்பாக அடங்குவதற்கு என்ன இருக்கிறது எனவும் அவரா எனக்கு சோறு போடுகிறார் எனவும் தங்க தமிழ்செல்வன் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். 

அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தது முதல், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி நடத்துவது
வரையிலும் டிடிவி தினகரனின் நம்பிக்கைக்குரியவராக, தங்க தமிழ்ச்செல்வன் இருந்தார். 

மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தொடர்ந்து அமமுகவிற்காக களப்பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் தொலைபேசியில் டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிக்கும் ஒலிப்பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையடுத்து கட்சியை பற்றி நான் பேசியது உண்மைதான் எனவும் எனது கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் என்னைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டியது தானே என தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பினார்.

இதுகுறித்து நேற்று டிடிவி தினகரன் பேசும்போது, “யாரையும் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டிய அச்சமோ, தயக்கமோ இல்லை. தங்க தமிழ்செல்வனை ஊடகங்களில் சரியாக பேசும்படி கூறினேன். சரியாக பேசாவிட்டால் பதவியில் இருந்து நீக்க வேண்டி வரும் என கூறினேன்.

அவர் விஸ்வரூபம்லாம் எடுக்க முடியாது. என்னை பார்த்தால் தங்க தமிழ்செல்வன் பெட்டிப் பாம்பாக அடங்குவார். இனி தங்க தமிழ்செல்வனிடம் விளக்கம் கேட்க முடியாது. புதிய கொள்கை பரப்பு செயலாளரை விரைவில் அறிவிக்க இருக்கிறோம். யாரோ சொல்வதை கேட்டு இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார். ஊடகங்கள் அவரை பேட்டி எடுத்து அவரின் பதவியை காலி செய்து விட்டன” எனத் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் டிடிவி பேச்சு குறித்து தங்க தமிழ்செல்வன் புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேட்டி கொடுத்தார். அப்போது பேசிய அவர், “டிடிவி இப்போதுதான் முடிவு எடுக்கிறார். பாராட்டுகிறேன். நான் உண்மையை பேசியதால் ஊடகங்கள் என்னை பெரிதாக காண்பித்தன. ஊடகங்களை குறைகூறுவது தலைமைக்கு அழகு இல்லை. கட்சிக்கான வேலையை மட்டும் தலைமை பார்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு என்னை பற்றி அவதூறு பரப்புகிறார் டிடிவி. 

அவர் ஒபிஎஸ்சை சந்தித்து தவறு. அதை எங்களிடம் சொல்லிவிட்டு தான் செய்தேன் என்பது தவறு. விஜயபாஸ்கர் நடை பயணத்தில் இருக்கும்போது பார்த்தேன் என்பது தவறு. பொன்.ராதாகிருஷ்ணன் தொலைபேசியில் பேசினார் என்று சொன்னது தவறு. கூவத்தூரில் எங்களை ஒரு மாதம் அடைத்தது யாரை கேட்டு அடைத்தீர்கள். பாண்டிச்சேரியில் எங்களை ஒருமாதம் அடைத்தீர்கள். எதற்கு அடைத்தீர்கள்? 

திருப்பரங்குன்றம், நெல்லை, தஞ்சை, உள்ளிட்ட இடங்களில் உட்காந்து வேலை பார்த்தோம். தீவிரவாத அமைப்புக்கு தலைவராக வேண்டியவர் கட்சிக்கு தலைமையாய் வந்துவிட்டார். தீவிரவாதம் அமைப்புதான் ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தையை பயன்படுத்தும். மக்களை எவ்வளவு நாட்கள் தான் ஏமாத்த முடியும். ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தையை பயன்படுத்தி என்ன சாதித்தீர்கள். இரட்டை இலையை மீட்கவில்லை. 18 எம்.எல்.ஏக்களின் பதவிக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. 

வேலுமணியிடமும் தங்கமணியிடமும் நான் பேசியதே இல்லை. அவர்கள் என்னை ஆட்டிப்படைப்பதாக டிடிவி கூறுகிறார். எனது அடுத்தகக் ட்ட நடவடிக்கை வரை அமைதியாக இருப்பேன். பிற்காலத்தில் அரசியல் விமர்சகராக வருவேன். எனக்கு வேறு எந்த எண்ணமும் இல்லை. டிடிவியே என்னைப்பற்றி தவறாக பேசி வருகிறார். 18 எம்.எல்.ஏக்களின் குடும்பங்கள் எவ்வளவு வேதனையில் உள்ளது தெரியுமா?

கருத்துக்களை கேட்கவில்லை என்றால் விமர்சனங்களை வைக்கத்தான் செய்வேன். அதை தலைமையில் இருப்பவர் தாங்கிக்கொள்ள வேண்டும். கூப்பிட்டு பேச வேண்டும். டிடிவியிடம் பெட்டி பாம்பாக அடங்குவதற்கு என்ன இருக்கு. இவரு எனக்கு என்ன சோறு போடுறாரா. தராதரம் இல்லாத பேச்சு பேசக்கூடாது” எனத் தெரிவித்தார்.