டிரெண்டிங்

சுடு மண்ணிலே கலை வண்ணம் கண்ட டெரக்கோட்டா சிற்பி முனுசாமி 

சுடு மண்ணிலே கலை வண்ணம் கண்ட டெரக்கோட்டா சிற்பி முனுசாமி 

EllusamyKarthik

சிந்து சமவெளி நாகரீகம்  உருவான காலத்தில் இருந்தே சுடு மண்ணால் செய்த பொருட்கள் மற்றும் சிற்பங்கள் பயன்பாட்டில் இருந்தமைக்கான ஆவணங்கள் இருப்பதை நாம் எல்லோருமே அறிந்திருப்போம். 

கால ஓட்டத்தில் நவநாகரீக வளர்ச்சியினால் பாரம்பரிய பெருமை மிக்க பழக்க வழக்கங்களை எல்லாம் ஒவ்வொன்றாக இழந்து வரும் சூழலில் சுடு மண்பாண்ட கலையை மீட்டெடுக்கும் வகையில் இயங்கி வருகிறார் புதுச்சேரியை சேர்ந்த டெரக்கோட்டா சிற்பி முனுசாமி. 

“என் முழு பேர் கிருஷ்ணன் முனுசாமி. அப்பா கிருஷ்ணபக்தர் - அம்மா மங்கலட்சுமி. எங்க குடும்பத்துல நான் 12வது பிள்ளை. பல தலைமுறையா மண்பாண்டங்கள் செய்வது தான் எங்க குல தொழில். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். 

பின்னர் தொழில் கல்வி. ஐந்து வயதிலிருந்தே அப்பாவுக்கு ஒத்தாசையாக இருந்து வருகிறேன். அவர் செய்யும் வேலையை கண்களால் பார்த்து பழகிய என் கைகள் தானாகவே மண்ணை பிடித்து பொம்மை செய்யும் வேலைகளை செய்ய ஆரம்பித்தன.

80களில் துவங்கி இன்றுவரை மண்ணை சார்ந்து தான் என் பயணம் போய் கொண்டிருக்கிறது. 

ஆரம்பத்தில் கிராம தெய்வங்கள், குதிரை, சிறிய அளவிலான பொம்மைகள், மண்பாண்டங்கள் மாதிரியான வேலைகளை தான் செய்து வந்தேன். அந்த சமயத்தில் தான் வெவ்வேறு பகுதிகளின் மண்சார்ந்த கைவினை கலைகள் குறித்து தெரிந்து கொள்வதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்தேன்.

அதற்காக கேரளா சென்றிருந்த போது எனது இரண்டாவது குருவான ஆரியநாடு நடராஜன் குருநாதரை சந்தித்தேன். திருவனந்தபுரம் மருத்துவ கல்லூரி மாணவர்களுக்காக மனித உடல் உறுப்புகளை தத்ரூபகமாக செய்து கொடுப்பதில் அவர் வல்லவர். 

அவரிடம் பயிற்சி பெற்றதன் மூலம் பொம்மைகள் வடிவமைப்பதற்கான உடலின் உடல்கூறு அமைப்புகள் குறித்து தெரிந்து கொண்டேன். மண்டை ஓட்டை கையில் கொடுத்தால் கூட அதற்கேற்ற முகத்தை உத்தேசமாக வடிவமைக்கும் அளவிற்கு கைதேர்ந்தேன். அப்படியே வடமாநிலங்களுக்கு பயணம் சென்றிருந்த போது ராஜஸ்தானின் பாரம்பரிய மண்பாண்ட கலை வேலைப்பாடுகளோடு செய்யப்படுகின்ற குதிரை பொம்மைகளை செய்வதை குறித்து தெரிந்து கொண்டேன். 

ஊர் திரும்பியதும் தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் மாநில கலையின் கலவையாக சுடு களி மண் சிற்பங்களை செய்ய ஆரம்பித்தேன். 

‘வில்லியனூர் டெரக்கோட்டா’ என்ற பெயரில் நான் செய்யும் சிலைகள் உலகம் முழுவதும் பிரபலமடைய துவங்கின. அரை அங்குலத்திலிருந்து ஐம்பது அடி வரையிலான டெரக்கோட்டா சிலை செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்து வருகிறது. 

மறுபக்கம் பார்த்தால் நாற்பது வருடங்களுக்கு முன்னர் வரை மண்பாண்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. கால ஓட்டத்தில் பிளாஸ்டிக் மாதிரியான பாத்திரங்களை மக்கள் பயன்படுத்த துவங்கிய பின்னர் மண்பாண்டங்கள் பயன் குறைந்து போனதோடு அழிவின் விளிம்புக்கு இந்த கலை தள்ளப்பட்டது. அதை எப்படியாவது காப்பாற்றி, மீட்டெடுக்க வேண்டுமென்ற நம்பிக்கையோடு எனக்கு தெரிந்த டெரக்கோட்டா கலையில் பலருக்கு பயிற்சி கொடுக்கும் வேலையை கடந்த 90களில் இறங்கினேன். 

பலருக்கு பயிற்சி கொடுத்து, அவர்களையும் மண்பாண்ட கலைஞர்களாக மாற்றியுள்ளேன். 

ஒவ்வொரு ஊரிலும் பாரம்பரிய கலை மற்றும் அதை நம்பியுள்ள கலைஞர்களையும் மேம்படுத்தும் விதமாக ‘கைவினை கலை கிராமங்களை’ ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில மற்றும் மத்திய அரசுகள் அமைக்க வேண்டும்” என்ற எதிர்பார்ப்போடு பேசுகிறார் அவர். 

அய்யனார், முனீஸ்வரர், அப்துல் கலாம், எம்.ஜி.ஆர், கண்ணதாசன், ராஜிவ் காந்தி மாதிரியானவை முனுசாமி உருவாக்கியுள்ள டெரகோட்டா சிலைகளில் மாஸ்டர் பீஸ். 

அவரது பணியை பாராட்டி பதம்ஸ்ரீ விருதும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.