டிரெண்டிங்

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

webteam

டிடிவி தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக இரு அணிகளாக செயல்பட்டபோது தற்காலிக கட்சிப் பெயர்கள் கொடுக்கப்பட்டது. அதன்பின் அணிகள் இணைந்ததால் ஓ.பி.எஸ் –ஈ.பி.எஸ் அணியே உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன், சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அதில் மகத்தான வெற்றியையும் பெற்றார்.

இந்நிலையில் தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அடுத்து வரும் தேர்தலில் குக்கர் சின்னத்தையும், ‘அனைத்திந்திய அம்மா திராவிட முன்னேற்ற கழகம்’, ‘எம்.ஜி.ஆர் அம்மா முன்னேற்ற கழகம்’ மற்றும் ‘அம்மா எம்.ஜி.ஆர் முன்னேற்ற கழகம்’ ஆகிய மூன்று பெயர்களில் ஒன்றினையும் பயன்படுத்த அனுமதிக்ககோரி, தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதன் மீதான விசாரணையில், டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தினகரன் பரிந்துரைத்த கட்சி பெயர்களில் மூன்று பெயர்களில் ஒன்றை ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.டெல்லி உயா்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், மதுசூதனன் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். அதில், டிடிவி தினகரன் ஏற்கனவே இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க.வுக்கு உரிமை கோரி வழக்கு தொடா்ந்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில் எதன் அடிப்படையில் தினகரனுக்கு குக்கா் சின்னம் ஒதுக்க முடியும் என மனுவில் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, டிடிவி தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இரு தரப்பும் கூடுதலாக ஆவணங்களை தாக்கல் செய்யக்கூடாது என தெரிவித்ததோடு வழக்கை 3 வாரத்துக்குள் டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்து முடிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.