டிரெண்டிங்

முதல்வர் எதற்கு ட்வீட் செய்தார், ஏன் நீக்கினார் என தெரியவில்லை: தமிழிசை

முதல்வர் எதற்கு ட்வீட் செய்தார், ஏன் நீக்கினார் என தெரியவில்லை: தமிழிசை

webteam

மும்மொழி கொள்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதற்கு ட்விட் செய்தார், எதற்கு ட்வீட்டை நீக்கினார் என்று தெரியவில்லை என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டிருந்த முதலமைச்சர் பழனிசாமி, பிற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக பயிற்றுவிப்பது உலகின் தொன்மையான ஒரு மொழிக்கு செய்யும் சேவையாக இருக்கும் என தெரிவித்திருந்தார். 

இதனையடுத்து, மும்மொழி கொள்கையை தமிழக முதல்வர் ஆதரிக்கிறார் என விமர்சனங்கள் எழுந்தன. முதலமைச்சரின் கருத்து மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக உள்ளதாக அரசியல் கட்சி தலைவர்கள் சிலரும் கருத்து தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், இந்தி மொழி தொடர்பான தன்னுடைய ட்விட்டர் பதிவை முதலமைச்சர் பழனிசாமி நீக்கியுள்ளார்.
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதற்கு ட்விட் செய்தார், எதற்கு ட்வீட்டை நீக்கினார் என்று தெரியவில்லை. தமிழகத்தில் இருமொழிக்கொள்கை இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் புதிய கல்விக்கொள்கையில் மும்மொழிக்கொள்கை என அறிவித்திருப்பது விருப்பமான இன்னொரு மாநிலத்தின் மொழியை இன்னொரு மாநிலத்தவர்கள் கற்பதற்காகத்தான். 

ஆக மற்ற மாநில மொழிகளோடு ஒப்பிடும்போது தமிழ் தொன்மையான மொழி. இனிமையான மொழி. முதலமைச்சரின் ட்வீட் மட்டுமல்ல முந்தைய காலத்திலேயே பிரதமர் சொல்லியிருக்கிறார். வடமொழியை சார்ந்தவர்கள் தென் மொழியை கற்க வேண்டும். தென் மொழியை சார்ந்தவர்கள் வடமொழியை கற்க வேண்டும் என்று. மொழிப்பறிமாற்றம் இருக்க வேண்டும் என்று. அது தமிழாக இருக்கும்பட்சத்தில் நமக்கு மகிழ்ச்சிதான்.

நீட் தேர்ச்சியில் இந்தியாவிலேயே 5 ஆவது இடத்தை நாம் பெற்றுள்ளோம். அதுமட்டுமில்லாமல் மற்ற மாநிலங்கள் எல்லாம் நான்கு வருடங்களாக நீட்டை எதிர்கொண்டு வருகின்றனர். நாம் ஒரு வருடம் விலக்கு அளிக்கப்பட்டு மூன்று வருடம்தான் விலக்கு அளிக்கிறோம். இதனால் அடுத்தமுறை இன்னும் அதிக தேர்ச்சி பெற வாய்ப்பிருக்கிறது. 

மதச்சின்னங்களை இழிவுப்படுத்துவது போன்று பதிவிடுவது மிக மிக தவறான விஷயம். கவலையளிக்கக்கூடியது. இதுபோன்ற விஷயங்களை வன்மையாக கண்டிக்கிறேன். காவிரி கோதாவரி திட்டம் 60 ஆயிரம் கோடி ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது. மிக விரைவில். ஏனென்றால் நிதின் கட்கரி முதல் திட்டமே அந்த திட்டம் என தெரிவித்திருக்கிறார். அது நிறைவேறும்” எனத் தெரிவித்தார்.