பொதுவாக மன அழுத்தம் இருக்கிறதா இல்லையா என்பதை இதயத்துடிப்பை வைத்து கணக்கிடுவார்கள். ஆனால் ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மன அழுத்தத்தை கண்டுபிடிக்க புது வகையிலான முறை குறித்த ஆய்வை மேற்கொண்டிருக்கிறார்கள்.
அதாவது ஒரு நபர் கம்ப்யூட்டரின் கீபோர்டு மற்றும் மவுஸ் ஆகியவற்றை பயன்படுத்தும் முறையை வைத்தே அவர் மன அழுத்தத்தில் இருக்கிறாரா இல்லையா என்பதை கண்டறிந்து விடலாம் என ஸ்விஸ் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கிறதாம்.
இது தொடர்பாக பேசியுள்ள கணிதவியலாளரும் ஆய்வு ஆசிரியருமான மாரா நாகெலின், “கணினியின் மவுஸை நகர்த்துவது மற்றும் கீபோர்டில் டைப் செய்யும் முறையே அலுவலகத்தில் எந்த அளவுக்கு மன அழுத்தம் நிறைந்த வேலையில் ஒருவர் இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க சிறந்த கணிப்பு முறையாக இருக்கும். இது இதயத் துடிப்பை கணக்கிடுவதை காட்டிலும் எளிதான முறையாக இருக்கும்.” என்றிருக்கிறார்.
Swiss Federal Institute of Technology in Zurich (ETHZ) என்ற அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே 90 பேர் கொண்ட பங்கேற்பாளர்களிடம் பணி இடத்தில் மன அழுத்தத்தை கண்டறியும் ஆய்வை நடத்தியிருக்கிறார்கள். அந்த ஆய்வின் போது பங்கேற்பாளர் கீபோர்ட் டைப்பிங் மற்றும் மவுஸ் பயன்பாட்டு முறையை கூர்ந்து கவனித்திருக்கிறார்கள். இதனூடே அவர்களது இதயத்துடிப்பையும் கண்காணித்திருக்கிறார்கள்.
நிதானமாக, ஆசுவாசமாக பணியாற்றுவர்களை விட, மன அழுத்தத்தில் இருப்பவர்களின் டைப்பிங் முறையும், மவுஸ் பயன்படுத்துவதும் வேறு மாதிரியானதாக இருப்பதாக தெரிந்திருக்கிறது. இதுபோக, “ஸ்ட்ரெஸ்ஸாக இருப்பவர்கள் மவுஸ் பாயின்ட்டரை அடிக்கடி நகர்த்துவது, டெஸ்க்டாப் ஸ்க்ரீனில் இருந்து சற்று தொலைவில் இருந்தபடியே பணியாற்றுகிறார்கள்” என்றும் நாகெலின் தெரிவித்திருக்கிறார்.
Neuromotor noise theory என்பதின் அடிப்படையிலேயே மன அழுத்தத்தை கீபோர்ட் டைப்பிங் மற்றும் மவுஸ் பயன்பாட்டு முறையோடு ஒப்பிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆராய்ச்சியின் உதவி ஆய்வு ஆசிரியரும், உளவியலாளருமான ஜாஸ்மின் கெர்,
“அதீத மன அழுத்த செயல்பாட்டால் தகவல்களை செயலாக்கும் மூளையின் வேலையையே எதிர்மறையாக பாதிக்கும். இதனால் தனி மனிதனின் திறன்களும் பாதிப்படையும்” என்றிருக்கிறார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்திருக்கும் ஆய்வாளர்கள், “ஸ்விட்சர்லாந்தில் மூன்றில் ஒருவருக்கு பணியிடத்தில் மன அழுத்தம் இருக்கின்றனர். இதனை போர்க்கால அடிப்படையில் கண்டறிந்து அதனை களைய வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்கள். இவ்வாறு பணியிட மன அழுத்தங்களால் பாதிக்கப்படுவோருக்கு தாம் அந்த பாதிப்பிற்குள்ளாகி இருக்கிறோம் என்பது குறித்த எந்த விழிப்புணர்வு இல்லாமலேயே இருக்கிறார்கள். இதனால் அவர்களது உடல் மற்றும் மன ரீதியான வளங்களே காலப்போக்கில் குறைகிறது என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.