பெற்றோரை இழந்து வறுமையில் வாடும் மாணவிக்கு கண்பார்வை கிடைக்க அரசு உதவ வேண்டும் என பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியின் அண்ணன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள களத்தூர் ஊராட்சிக்குட்பட்ட சித்துக்காடு கிராமம் முனியாண்டி தெருவை சேர்ந்தவர் பெத்தபெருமாள். தேங்காய் உரிக்கும் தொழிலை செய்து வந்தார். இவருடைய மனைவி அமுதா (மாற்றுத்திறனாளி). இவர்களுக்கு காளிதாஸ் (14) என்ற மகனும் கார்த்திகா (12) என்ற மகளும் உள்ளனர். சித்துக்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் காளிதாஸ் பத்தாம் வகுப்பும், கார்த்திகா 7ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு பெத்தபெருமாள் தேங்காய் உரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாம்பு கடித்து உயிர் இழந்துள்ளார். இதைத்தொடர்ந்து இரண்டு பிள்ளைகளையும் மாற்றுத்திறனாளியான தாய் அமுதா வளர்த்து வந்தார். இதையடுத்து அமுதாவும் நோய்வாய்ப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.
அமுதாவின் தாயார் சுந்தரம்பாள் 100 நாள் வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு இரண்டு பேரக் குழந்தைகளையும் வளர்த்து வருகிறார். தாய் உயிருடன் இருக்கும் வரை தனது தங்கையை பார்த்து கொண்டதாகவும் தற்போது தங்கையுடன் தனியாக முற்றிலும் சேதமடைந்து கதவு கூட இல்லாமல் பாதுகாப்பற்ற வீட்டில் வசித்து வருவதாகவும், தங்கையை தனியாக வீட்டில் விட்டுச் செல்வது பயமாக இருப்பதாகவும் காளிதாஸ் வேதனையுடன் தெரிவித்தார்.
கார்த்திகா பிறந்து 20 நாட்கள் ஆனபோது நாய் ஒன்று அவரது முகத்தில் கடித்து குதறியதில் அவரது ஒரு கண் பார்வை போய்விட்டது. கண் பார்வை இழந்த கண் மீண்டும் தெரிவதற்கு சில வருடங்கள் ஆகும். அதற்கு செலவும் அதிகம் ஆகும் என்றும் மருத்துவர்கள் அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். தற்பொழுது பெற்றோர் இல்லாத நிலையில் தன்னுடைய தங்கைக்கு கண் பார்வை கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்று காளிதாஸ் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
பெற்றோரை இழந்து தவிக்கும் இவர்களின் வயதான பாட்டி தற்போது ஆறுதலாக இருந்தாலும் எவ்வளவு நாட்களுக்கு பாட்டியால் உதவி செய்ய முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பெற்றோரை இழந்து, வறுமையை சுமந்து, ஆரோக்கியம் இன்றி பல இன்னல்களோடு போராடும் இவர்களுக்கு அரசு உதவி செய்தால் மட்டுமே இவர்களது வாழ்வில் ஒளியேற்ற முடியும்.