டிரெண்டிங்

''அமைதியாக நடைபெற்ற வாக்குப்பதிவு'' - டிஜிபி சைலேந்திர பாபு

''அமைதியாக நடைபெற்ற வாக்குப்பதிவு'' - டிஜிபி சைலேந்திர பாபு

JustinDurai

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. பெரியளவில் அசம்பாவிதங்கள் இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததாக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

நேற்று காலை 7 மணி முதலே வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற தொடங்கினர். முதலில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு, பிற்பகல் மெல்ல வேகமெடுத்தது. வாக்குப்பதிவின்போது சில இடங்களில் சிறு, சிறு பிரச்னைகள் எழுந்தன. எனினும் காவல்துறையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர். மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்த பின்னர், வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன், வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுச்செல்லப்பட்டன. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பெரியளவில் அசம்பாவிதங்கள் இன்றி அமைதியாக நடைபெற்று முடிந்ததாக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ஒரு சில இடங்களில் வாக்குவாதம், சாலை மறியல் உள்ளிட்ட சிறிய பிரச்னைகள் ஏற்பட்டப்போதும், காவல்துறையினர் விரைந்து சென்று நடவடிக்கை எடுத்து அமைதியை நிலைநாட்டியதாகவும் அவர் கூறியுள்ளார். பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டதாலும், அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டதாலும் வன்முறை சம்பவங்கள் தவிர்க்கப்பட்டதாகவும், நடந்த சில நிகழ்வுகள் குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: மதுரை: ஹிஜாபை அகற்றுமாறு கூறிய பாஜக முகவர் கைது - 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு