புதுக்கோட்டையில் அதிமுக முன்னாள் கவுன்சிலரை மர்ம நபர்கள் சிலர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட 7வது வார்டு அடப்பன்வயலை சேர்ந்தவர் நைனாமுகமது. அதிமுகவின் முன்னாள் கவுன்சிலரான இவர், அடப்பன்வயலில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற போது அவரை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்துள்ளது. ஏன் வழிமறித்தனர் என்று நைனா முகமது சுதாரிப்பதற்குள், அந்த கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளது. இதனால் காயமடைந்த நைனா முகமது சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்துள்ளார்.
இந்த சம்பவத்தை கண்ட அப்பகுதியினர் நைனா முகமதுவை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் நைனா முகமது வெட்டபட்டதை கண்டித்தும், குற்றாவாளிகளை கைது செய்யக்கோரியும் அடப்பன்வயலை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதுக்கோட்டை-திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இதேபோன்று பல்வேறு குற்றச் சம்பவங்கள் அடப்பன்வயல் பகுதியில் அரங்கேறுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.