வேலூர் மாவட்டத்தில் வாரத்தில் 3 நாட்கள் மட்டும் கடைகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அதனைக் கட்டுப்படுத்த அரசு தரப்பிலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாகச் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மீண்டும் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மற்றும் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று கடும் பொது முடக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்திலும் கட்டுப்பாடுகளை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, வேலூரில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி கடைகள், மளிகைக்கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இறைச்சிக்கடைகள் ஞாயிறு மற்றும் புதன் ஆகிய 2 நாட்களில் மட்டும் செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.