டிரெண்டிங்

அதிமுகவில் சசிகலா, தினகரன்?: அமைச்சர்களின் பேச்சால் தொடரும் குழப்பம்

அதிமுகவில் சசிகலா, தினகரன்?: அமைச்சர்களின் பேச்சால் தொடரும் குழப்பம்

rajakannan

அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரனை முற்றிலும் நீக்குவது தொடர்பாக அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துக்களால் குழப்பம் தொடர்ந்து வருகிறது.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு தனி அணியாக செயல்பட்ட ஓ.பன்னீர் செல்வம், கட்சியில் இருந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை முற்றிலும் நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஓ.பி.எஸ். ஈ.பி.எஸ் அணிகள் இணைந்தன. பின்னர் சசிகலா குடும்பத்தினர் மற்றும் தினகரனை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 

அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து நீக்குவது என்ற முடிவில் உறுதியாக இருப்பதாக கூறி வந்தனர். இருப்பினும் சசிகலா மற்றும் தினகரனை பொறுத்தவரை சில அமைச்சர்கள் இருவரையும் நீக்குவது என்றும் சிலர் தினகரனை மட்டும் நீக்குவது என்றும் கூறிவந்தனர். 

இந்த நிலையில், சசிகலா மற்றும் தினகரன் இருவரும் விரைவில் கட்சியில் இணைவார்கள் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார். தினகரனையும் சேர்த்து தம்பிதுரை பேசியதால் புதிய குழப்பம் உருவானது. தம்பிதுரையின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா குடும்பத்தினர் மீண்டும் அதிமுகவில் இணைய வாய்ப்பே இல்லை என கூறினார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் அதிமுகவில் இணைய வாய்ப்பு இருப்பதாக தம்பிதுரை கூறியிருப்பது அவரது சொந்தக் கருத்து என்றார். 

இதனிடையே, அதிமுக எனும் தாய்க்கழகத்தில் அதிலிருந்து பிரிந்து சென்ற யார் வேண்டுமானாலும் வந்து இணையலாம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு அவ்வாறு பதிலளித்தார். 

அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துக்களால் ஈபிஎஸ் ஓபிஎஸ் அணியில் சசிகலா மற்றும் தினகரனை நீக்குவது குறித்து குழப்பமான நிலையே நீடித்து வருவதாக தெரிகிறது.