வரும் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள் என எண்ணுகிறேன் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து கட்சி நிர்வாகிகளிடம் தேர்தல் பணி குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, “தேர்தலில் சீட் கிடைக்காதவர்களை அழைத்துப் பேசி அவர்கள் சமாதான படுத்தி விட்டோம். புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. தொகுதி பங்கீடு நிறைவடைந்த பின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். மக்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து ஆட்சியில் இருக்கும் போதே அதனை நிறைவேற்றியது அதிமுக அரசு.
கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக வெற்றி பெறும். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தேர்தல்களில் கருத்துக்கணிப்புகள் என்பது பொய்யாகி அதிமுக வெற்றி பெற்றதுபோல் சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும். திமுக தேர்தல் அறிக்கை குறித்து முழுமையான அறிந்து பிறகு கருத்து கூறுகிறேன்.
ஸ்டாலினுக்கு என்ன ஜோசியமா தெரியும். 200 தொகுதிகளில் ஜெயிப்போம் என கூறுகிறார். மழையாலும், புயலாலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் ரத்து செய்யப்பட்டு உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறுவோம். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்கள் சரியான தீர்ப்பு வழங்குவார்கள் என எண்ணுகிறேன்” என்றார்.