டிரெண்டிங்

வாகன சோதனையில் சிக்கிய கொள்ளை கும்பல்... 39 சவரன் நகை; 1 1/2 கிலோ வெள்ளி பறிமுதல்

வாகன சோதனையில் சிக்கிய கொள்ளை கும்பல்... 39 சவரன் நகை; 1 1/2 கிலோ வெள்ளி பறிமுதல்

kaleelrahman

பகலில் கட்டடத் தொழிலாளிபோல் நோட்டமிட்டு இரவில் தொடர்ச்சியாக கொள்ளை அடிக்கும் கும்பலை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் 39 சவரன் தங்க நகைகள், மற்றும் ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த சிறுப்பாக்கம் சோதனைச்சாவடியில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் டெல்டா சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த பேருந்தை சோதனை செய்ய முயன்றபோது பேருந்தில் இருந்த 4பேர் மூட்டைகளுடன் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த மோட்டூர் பகுதியை சேர்ந்த அண்ணாதுரை (45), ரஞ்சித் (28), மூர்த்தி (24), பெங்களூரை சேர்ந்த சத்யா (19) என்பது தெரியவந்தது. இவர்கள் வைத்திருந்த மூட்டைகளில் கத்தி, கடப்பாரை, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்து தெரியவந்தது.


இதையடுத்து சந்தேகமடைந்த போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் அவர்கள் வேப்பூர் , சிறுபாக்கம் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும், சிறுப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 13 திருட்டு வழக்குகளில் இவர்கள் குற்றவாளிகளாக தேடப்பட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இவர்கள் 4 பேர் அளித்த தகவலின் அடிப்படையில் தாங்கள் திருடிய நகைகளை தங்களது உறவினர்களான மோட்டூர் பகுதியை சேர்ந்த லட்சுமி (40), மாரி (26), சரிதா (33) ஆகியோரிடம் கொடுத்து விற்று வந்ததும் தெரியவந்தது. போலீசார் இவர்களிடம் இருந்து 39 சவரன் நகை, 1 1/2 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

வேப்பூர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இச்சம்பவம் குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை வழக்கில் தொடர்புடைய 4பேரையும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த 4பேரையும் கைது செய்துள்ளனர்.