இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் மக்கள் அன்றாடம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருவதாக கூறுகின்றனர்.
சென்னை சட்டமன்ற தொகுதிகளில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதி என்பதால் ஆர்.கே.நகர் தொகுதி விஐபி அந்தஸ்து பெற்றிருந்தது. அவரது மறைவுக்குப்பிறகு கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடக்க இருந்து பணப்பட்டுவாடா புகாரால் நிறுத்தப்பட்டது. இதனால், ஓராண்டாக சட்டமன்ற உறுப்பினர் இல்லாத தொகுதியாக இருப்பதால் எந்த பிரச்னையும் தீரவில்லை என்கிறார்கள் மக்கள். குடிநீர் பிரச்னை ஒருபுறம் எனில், குடிநீரில் கழிவு நீரும் கலப்பது பெரும் பிரச்னை என்று இவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் வ.உ.சி நகரில் இருக்கும் மீன் மார்க்கெட் 15 ஆண்டு காலமாக இருக்கிறது. ஆனால் சீரமைக்கப்படாமல் பயன்படுத்தவே இயலாத சூழல் இருக்கிறது. இதன் காரணமாக மீன் வியாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது.
ஜெயலலிதா இருக்கும்போது சிறப்பு முகாம்கள் அமைத்து தீர்வுகள் எட்டப்பட்டு வந்தன. ஓராண்டாக தொகுதியில் எந்த வளர்ச்சிப்பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருப்பதால் தேர்தலுக்குப் பிறகாவது பிரச்னை தீரும் என தொகுதிவாசிகள் காத்திருக்கிறார்கள்.