டிரெண்டிங்

“முதல்வர் முன்னால் ஒரு வழிதான் இருக்கிறது”- ஏழு பேர் விடுதலைபற்றி கருணாஸ்

“முதல்வர் முன்னால் ஒரு வழிதான் இருக்கிறது”- ஏழு பேர் விடுதலைபற்றி கருணாஸ்

webteam

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் சுப்ரீம்கோர்ட் தெரிவித்துள்ளது. 7 பேரின் விடுதலை குறித்து ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே இவ்வழக்கில் தண்டனையை உறுதி செய்த உச்சநீதிமன்ற அமர்வுக்குத் தலைமை தாங்கிய நீதிபதி கே.டி. தாமஸ், தங்களது தீர்ப்பில் சட்ட அறியாமை என்ற பிழை நிகழ்ந்துள்ளதை ஏற்றுக் கொண்டு, ஏழு தமிழர்களையும் விடுதலை செய்து விடலாம் என்று வெளிப்படையாகப் பலமுறை கருத்துத் தெரிவித்திருக்கிறார். கொலையுண்ட ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், இவர்களை விடுதலை செய்வதில் தமக்கு மறுப்பேதுமில்லை என்று தெரிவித்து விட்டனர். 

இந்த நிலையில், உச்சநீதிமன்றமே ஏழு பேர் விடுதலையை அறிவித்திருக்க முடியும். ஆனால், இந்திய அரசின் கருத்தை அது கேட்டது. இந்திய அரசோ, ஏழு பேர் விடுதலையை ஏற்க முடியாது எனக் குடியரசுத் தலைவர் வழியாக அறிவித்துவிட்டது. ஆனால் காலம் கடந்தாலும் இப்போது உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு அந்த விடுதலை வாய்ப்பை வழங்கியுள்ளது.

இச்சூழலில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்து, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஒருமனமான தீர்மானத்திற்கும், அதன் பிறகு நிறைவேற்றப்பட்ட சட்டமன்றத் தீர்மானங்களுக்கும், ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் கருத்துக்கும் மதிப்பளிப்பதாக இருந்தால், எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு முன்னால் ஒரே ஒரு வழிதான் இருக்கிறது. அது அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 ஆகும். இதை உச்சநீதிமன்ற எடுத்துரைத்துவிட்டது.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது அமைச்சரவையைக் கூட்டி ஏழு பேரையும் விடுதலை செய்வதாகத் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு ஆளுநர் வழியாக அரசமைப்புச் சட்ட உறுப்பு 161இன்படி அறிவிக்க வேண்டும்” என கருணாஸ் வலியுறுத்தியுள்ளார்.