டிரெண்டிங்

காவல் துறையின் மிருகத்தனமான செயலை கண்டிக்கிறேன்: ரஜினிகாந்த்

காவல் துறையின் மிருகத்தனமான செயலை கண்டிக்கிறேன்: ரஜினிகாந்த்


தூத்துக்குடியில் காவல்துறை மேற்கொண்ட மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று 100வது நாள் போராட்டம் நடைபெற்றது. 144 தடை உத்தரவையும் மீறி போராட்டக்காரர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட சென்றதால், காவல் துறையினருடன் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு உள்ளிட்டவை நடத்தப்பட்டது. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 10 உயிரிழந்துள்ளனர். போலீஸ் தடியடியில் 60-க்கு
மேற்பட்டோர் காயமடைந்தனர். கல்வீச்சில் 15 போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசிய ரஜினிகாந்த் " உளவுத்துறை உள்ளிட்ட முழு நிர்வாகத்தின் தோல்வி. ஸ்டெர்லைட் விவகாரத்தில் அரசு அலட்சியமாக செயல்படுகிறது. காவல்துறையின் வரம்பு மீறி, சட்டத்துக்கு புறம்பான மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். உறவுகளை இழந்து வாடும் தூத்துக்குடி
மக்களுக்கு என் ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என ரஜினிகாந்த் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.