ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழு தமிழகம் முழுவதும் சென்று மக்களின் பிரச்னைகள் குறித்து ஆராய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட உள்ளதாக தெரிவித்தார். இதைத்தொடந்து மக்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் செயலி ஒன்றையும் உருவாக்கியுள்ளார். இதில் பல லட்சம்பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ரஜினி மன்றத்தை சேர்ந்த நிர்வாகி சுதாகர் தலைமையில் ஒரு குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு, இந்த மாத இறுதியில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று அங்கு உள்ள பிரச்சனைகள் என்னென்ன..? அது பற்றிய மக்களின் கருத்து என்ன..? என்பது உள்ளிட விஷயங்களை ஆராயவுள்ளனர். பின்னர் அதன் விவரங்களை ரஜினிகாந்த்திடம் சமர்பிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்பின் ரஜினிகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கட்சி தொடங்கும் நேரத்தில் மாவட்டம் வாரியாக பொறுப்பாளர்களை நியமிப்பது குறித்தும் ரஜினி, ரசிகர் மன்றங்களை சார்ந்தவர்களோடு ஆலோசிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி முதல் தன்னுடைய அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ரஜினிகாந்த்தின் மன்ற நிர்வாகிகள் முதல்கட்டமாக தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.