கேரளாவிலிருந்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற முதல் பழங்குடியினப் பெண்ணை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்தார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரத்தை அவர் தொடங்கியுள்ளார். வயநாடு பகுதியில் பிரச்சாரத்தின் போது ராகுல், “காங்கிரஸ் கட்சியின் சிறப்பான திட்டமான மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தினால்தான் ஸ்ரீதன்யா சுரேஷ் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற முடிந்தது. ஏனென்றால் அவரின் பெற்றோர்கள் இந்தத் திட்டத்தில் வேலை பார்த்து பயன் அடைந்தவர்கள். அத்துடன் ஸ்ரீதன்யா மிகவும் தன்னம்பிக்கை உடைய பெண்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் ராகுல் காந்தி இன்று ஸ்ரீதன்யா சுரேஷ்சை சந்தித்தார். அவர் ஸ்ரீதன்யாவின் குடும்பத்தை தனது விடுதிக்கு அழைத்து வர சொல்லி அவர்களுடன் உரையாடினார். இந்தச் சந்திப்பின் போது கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியும் இருந்தார். பின்னர் அவர்களுடன் ராகுல் மதிய உணவு உண்டார். இதுகுறித்து செய்தி, ‘ராகுல் வயநாடு தேர்தல் அலுவக’ என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த 5ஆம் தேதி வெளியான ஐஏஎஸ் தேர்வு முடிவில் கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதன்யா சுரேஷ் தேர்ச்சி பெற்றிருந்தார். இவர் கேரளாவிலுள்ள குரிசியா பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். இவர் இந்திய அளவில் 410 இடம்பிடித்தார். இந்த முடிவு வெளியானவுடன் ராகுல் காந்தி ஸ்ரீதன்யாவிற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.