டிரெண்டிங்

வாரிசு அரசியலுக்கு வெளியே புதிய தலைவர் - மூத்த தலைவர்களிடம் ராகுல் கறார்

வாரிசு அரசியலுக்கு வெளியே புதிய தலைவர் - மூத்த தலைவர்களிடம் ராகுல் கறார்

rajakannan

காங்கிரஸ் கட்சிக்கு தங்கள் குடும்பத்தில் அல்லாத புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டுமென மூத்த தலைவர்களிடம் ராகுல் காந்தி உறுதியாக தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவையில் காங்கிரஸ் கட்சி பெற்ற படுதோல்வி, கட்சிக்குள் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இரண்டாவது முறையாக காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியவில்லை. கடந்த டிசம்பர் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி நம்பிக்கை அளித்திருந்தது. அதற்கு முன்பு, கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை ஆட்சி அமைக்கவிடாமல் தடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. 

ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள இந்த 4 மாநிலங்களிலும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ராஜஸ்தானில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் மகன் மட்டும் வெற்றி பெற்றுள்ளார். பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை.

மக்களவையில் பெற்ற தோல்விக்கு பின்னர் மே 25 ஆம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தோல்விக்கு பொறுப்பேற்று தாம் ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்தார். ஆனால், கமிட்டியின் உறுப்பினர்கள் அவரது கோரிக்கையை ஒருமனதாக நிராகரித்தனர். ராகுலே தலைவராக நீடிக்க வேண்டுமென விருப்பம் தெரிவித்தனர். இதுவரைதான் அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியானது. 

ஆனால், காரியக் கமிட்டி கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது. குறிப்பாக புதிய தலைவரை தேர்வு செய்வது குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர்களான கே.சி.வேணுகோபால் மற்றும் அகமது படேல் ஆகியோரை இன்று சந்தித்துள்ளதாகவும், அந்தச் சந்திப்பின் போது, கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டுமென அவர்களிடம் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

தங்களது குடும்பத்தில் அல்லாமல் வேறொரு குடும்பத்தில் இருந்து புதிய காங்கிரஸ் தலைவர் இருக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ராகுலின் இந்த முடிவினை தொடக்கத்தில் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா எதிர்த்ததாகவும், பின்னர் அதனை ஒத்துக் கொண்டதாகவும் என்.டி.டி.வி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

“நம்முடைய போராட்டத்தை நாம் தொடர வேண்டியுள்ளது. நான் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாடுமிக்க ஊழியராகவே இருப்பேன். பயமில்லாமல் தொடர்ந்து போராடுவேன். ஆனால், கட்சியின் தலைவராக தொடர விரும்பவில்லை” என ராகுல் கூறியதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ராகுல் தன்னுடைய முடிவினை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மன்மோகன் சிங் வலியுறுத்தியதாக கூறப்பட்டிருந்தது.

அதேபோல், பிரியங்கா காந்தியின் பெயரினை மூத்த தலைவர்கள் சிலர் கூறிய போது, தன்னுடைய தங்கையை ஒரு பொழுதும் இந்தப் பதவிக்கு இழுக்க வேண்டாமென ராகுல் திட்டவட்டமாக கூறிவிட்டார். அப்பொழுதுதான், காந்தி குடும்பத்தில் இருந்துதான் தலைவர்கள் வரவேண்டும் என அவசியமில்லை என ராகுல் தெரிவித்திருக்கிறார். அதனால், இன்னும் சில தினங்களில் இந்த விவாதம் தொடர்பான அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2014 மக்களவைத் தேர்தலின் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த போதும், அப்போது தலைவராக இருந்த சோனியா காந்தியும், துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தியும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய முன் வந்தனர். ஆனால், கூட்டாகதான் தோல்விக்கு பொறுப்பேற்க வேண்டுமென கூறிய இதேபோல் காங்கிரஸ் காரிய கமிட்டி அந்த ராஜினாமா முடிவை நிராகரித்தது.