'புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வேண்டாம்; தனித்து போட்டியிடலாம்' என்று கூறி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி அலுவலகத்திற்கு வந்த நாராயணசாமியிடம் திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
புதுச்சேரியில் காங்கிரஸ் - திமுக கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீட்டில் பிரச்னை ஏற்பட்டதால், சென்னை சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் காங்கிரசுக்கு 15 இடங்களும், திமுகவுக்கு 13 இடங்களும், கூட்டணி கட்சிகளுக்கு இரு இடங்களும் ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டன. அதன்பிறகு முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் புதுச்சேரி திரும்பினர்.
இந்நிலையில், புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், வட்டாரத் தலைவர்கள், மாவட்டத்தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஒன்று கூடி ஆலோசித்தனர். அதில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றினர். தொடர்ந்து பல தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
இக்கூட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் புதுச்சேரியில் அதிக முறை ஆட்சியில் காங்கிரஸ் கட்சி இருந்தது. கடந்த தேர்தலில் 15 இடங்களில் வென்றிருந்தோம். கூட்டணிக்கட்சி திமுக முதலில் இரு இடங்களை மட்டுமே வென்றிருந்தது. தற்போது காங்கிரஸுக்கு குறைவாகவும், திமுகவுக்கு அதிகமாகவும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதனால் திமுகவுடன் கூட்டணி வேண்டாம். தனித்து காங்கிரஸ் போட்டியிடலாம் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என்றனர்.
இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்த நாராயணசாமியிடம் அங்கிருந்த நிர்வாகிகள் திமுகவிடம் சேர வேண்டாம் என்று நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை கொடுத்து வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.