டிரெண்டிங்

பிரியங்கா மாலை அணிவித்த லால் பகதூர் சிலையை கங்கை நீரால் கழுவிய பாஜக

பிரியங்கா மாலை அணிவித்த லால் பகதூர் சிலையை கங்கை நீரால் கழுவிய பாஜக

rajakannan

உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி மாலை அணிவித்து மரியாதை செய்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை, பாஜகவினர் கங்கை நீரால் கழுவி புனிதப்படுத்தினர்.

சோனியா காந்தியின் மகள் பிரியங்காவுக்கு உத்தரப் பிரதேச கிழக்குப் பகுதி பொதுச் செயலாளர் பொறுப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அவர் உத்தரப் பிரதேசத்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த மூன்று நாட்களாக அவர், நீர்நிலைகளின் வழியாக பிரயாக்ராஜில் இருந்து மிர்சாபூர் மாவட்டம் வரை சுமார் 140 கிலோ மீட்டர்‌ தூரத்துக்கு படகு பயணம் மேற்கொண்டுள்ளார். நதிக்கரையோரம் வசிக்கும் மக்களை பிரியங்கா நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது, பெண்களுக்கு மத்தியில் தரையில் அமர்ந்து அவர் பரப்புரை மேற்கொண்டார்.

இந்நிலையில், தனது நீர் வழிப்பயணத்தின் ஒரு பகுதியாக ராம்நகரின் சாஸ்திரி சவுக் பகுதியில் உள்ள முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்துக்கு பிரியங்கா சென்றார். அங்குள்ள சாஸ்திரியின் சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செய்தார். மூன்றாவது நாளாக இன்று பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் பரப்புரை மேற்கொள்கிறார்.

இதனிடையே, பிரியங்கா காந்தி சென்ற பின்னர் சாஸ்திரி நினைவிடத்திற்கு பாஜகவினர் சிலர் சென்றுள்ளனர். பிரியங்கா மாலை அணிவித்த சாஸ்திரியின் சிலை மீது கங்கை நீரை ஊற்றி அவர்கள் புனிதப்படுத்தியுள்ளனர்.

இதனால், சாஸ்திரி நினைவிடம் அமைந்துள்ள பகுதியில் பாஜக - காங்கிரஸ் தொண்டர்களிடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இதில் சிலரது சட்டைகளும் கிழிந்ததாக கூறப்படுகிறது.