தேமுதிகவிற்கு உள்ள பலம் என்ன என்பது நன்றாகத் தெரியும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணி, தொகுதிப்பங்கீடு என அரசியல் களம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, தமிழகத்தின் முக்கிய கட்சியான தேமுதிக இன்னும் தனது நிலைப்பாட்டை வெளியிடாமல் உள்ளது.
பாஜகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால் விஜயகாந்தை சந்தித்த பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் உடல் நலம் குறித்து விசாரிக்கவே வந்தேன் எனத் தெரிவித்தார்.
இவரையடுத்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்தித்து நல்ல முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து இன்று நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் விஜயகாந்தை சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தனர். மேலும் திமுகவில் கூட்டணி வைக்க வருமாறு விஜயகாந்துக்கு ஸ்டாலின் சூசகமாக அழைப்பு விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் விஜயகாந்தை சந்தித்ததில் துளிகூட அரசியல் கிடையாது என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக கூறினார். இதனிடையே கூட்டணி குறித்து இழுபறி நீடிக்கும் நிலையில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வரும் 24ஆம் தேதி முதல் தேமுதிக சார்பில் விருப்பமனு விநியோகம் செய்யப்பட்ட உள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர், நாளை மறுநாள் காலை 11 மணியளவிலிருந்து கோயம்பேட்டிலுள்ள தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 6ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். கூட்டணியில் இழுபறி நிலவுவதாக கூறப்படுகிறதே என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, தங்கள் பலம் பற்றித் தெரியும் என்றும் கட்சியின் கொள்கைக்கு ஏற்றவாறு யோசித்து நல்ல முடிவை ஒரு வாரத்தில் அறிவிப்போம் என்றும் அவர் கூறினார்.