டிரெண்டிங்

ஹெச்.ராஜாவுக்கு சரமாரியாக குவியும் அரசியல் கட்சித் தலைவர்களின் எதிர்ப்பு

ஹெச்.ராஜாவுக்கு சரமாரியாக குவியும் அரசியல் கட்சித் தலைவர்களின் எதிர்ப்பு

Rasus

தமிழகத்தில் பெரியார் சிலை அகற்றப்படும் என்று கூறிய பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவின் கருத்துக்கு பல தலைவர்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

திரிபுராவில் கடந்த 25ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று  பாஜக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனையடுத்து பாஜக தொண்டர்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் இடையே சில இடங்களில் மோதல் வெடித்தது.

இதனிடையே திரிபுராவில் பெலோனியா என்ற இடத்தில் இடதுசாரி புரட்சியாளர் லெனின் உருவச்சிலை புல்டோசர் உதவியுடன் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “ லெனின் யார்? அவருக்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. இன்று திரிபூராவில் லெனின் சிலை.. நாளை தமிழகத்தில் ஈ.வெ.ராமசாமி சிலை” எனப் பதிவிட்டுள்ளார்.

ஹெச்.ராஜாவின் இந்த பதிவுக்கு பல தலைவர்களும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், “ தந்தை பெரியாரின் சிலையை தொட்டுப்பார்க்கும் அளவிற்குகூட யாருக்கும் தகுதி கிடையாது. ஆனால் தொடர்ந்து ஹெச்.ராஜா வன்முறையை தூண்டக்கூடிய அளவில் பேசி வருகிறார். எனவே அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ரஜினி சொன்னதுபோன்று தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை. அதனை மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்தச் சூழலாக இருந்தாலும் தமிழகத்தில் அடுத்தது திமுகதான் ஆட்சி கட்டிலில் அமரப்போகிறது” எனத் தெரிவித்தார்.

பெரியார் பற்றி சிலர் இழிவாகப் பேசுவதை திராவிட இயக்கங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனவா? என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார். ஈரோட்டில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், ஹெச் ராஜாவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “ ஈ, கொசு விழுந்தால் கூட பயந்து ஓடுகின்ற கூட்டத்தை சேர்ந்தவர்கள்..  ஊமைத்துரை பேசாதபோது நெல் உமியை கைகளில் கசக்சி பூவென்று ஊதுவாராம். திராவிட உணர்வுள்ளவர்கள் ஒருநொடியில் அவர்களை ஊதிவிட முடியாதா..?” எனக் கூறினார்.

தமிழகத்தில் பெரியார் சிலையை ஒருபோதும் அகற்ற முடியாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.