மதுரையில் பாரதிய ஜனதா கட்சிப் பிரமுகரை தாக்க முயன்றதாக எழுந்த புகாரில் மதுரை கிழக்குச் சட்டமன்றத் தொகுதி திமுக எம்.எல்.ஏ மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் தன்னைப்பற்றி தவறானத் தகவல்கள் பரப்பியதாக கூறி மதுரை கிழக்கு சட்டமன்ற திமுக எம்எல்ஏ மூர்த்தி, தனது ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி கோட்டப் பொறுப்பாளர் சங்கரபாண்டியனின் வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்று அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் எம்எல்ஏ மூர்த்தி சங்கரபாண்டியனையும் அவரது மனைவியையும் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் சங்கரபாண்டி வீட்டில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய நிலையில், அந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் தன்னையும் தனது மனைவியையும் தாக்க முயன்றதுடன், கொலை செய்வதாக மிரட்டியதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேற்று சங்கரபாண்டியன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் திமுக சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி மீது உமச்சிகுளம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.