டிரெண்டிங்

மிரட்டும் தொனியில் பேசுகிறார் பிரதமர் மோடி: மன்மோகன் சிங்

மிரட்டும் தொனியில் பேசுகிறார் பிரதமர் மோடி: மன்மோகன் சிங்

rajakannan

காங்கிரஸ் தலைவர்களை பிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசிவருவதாக மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி கடந்த மே 6 ஆம் தேதி கர்நாடகாவில் பேசியது குறித்து மன்மோகன் சிங் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

அந்தக் கடிதத்தில், “தேவையில்லாமல் மிரட்டும் வகையில், பயமுறுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசக்கூடாது. நாட்டின் உயர்ந்த இடத்தில் உள்ள பதவிக்கும் அவ்வாறு பேசுவது அழகல்ல. ஒரு பிரதமர் இவ்வறு பேசுவது, நம்முடைய ஜனநாயக அரசியலில் நினைத்துப் பார்க்க முடியாத விஷயம் ஆகும். பிரதமர் இப்படி பேசுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமின்றி வேறு எந்தக் கட்சித் தலைவர்களையும் மிரட்டும் தொனியில் பேசக்கூடாது. காங்கிரஸ் கட்சி பல்வேறு சவால்களையும் மிரட்டல்களையும் எதிர்க்கொண்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கர்நாடக பரப்புரையின் போது பேசுகையில், “காங்கிரஸ் தலைவர்களே, நான் சொல்வதை உன்னிப்பாக கேளுங்கள். உங்களுடைய எல்லையை நீங்கள் மீறினால் அதற்கான விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும். நான் மோடி சொல்கிறேன்” என்று கூறினார். இந்தப் பேச்சை அடிப்படையாக கொண்டு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளார்.