டிரெண்டிங்

அஞ்சலி செலுத்த வந்த தினகரனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

அஞ்சலி செலுத்த வந்த தினகரனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

rajakannan

தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்த வந்த அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

‘நீட்’தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து போராடிய அனிதா, தனது மருத்துவ கனவு தகர்ந்ததால் நேற்று தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனிதாவின் உடல் அவரது சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள குழுமூரில் வைக்கப்பட்டுள்ளது. அவர் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் நேரடியாக சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், டிடிவி.தினகரன் மாலை 6 மணியளவில் அஞ்சலி செலுத்துவதாக குழுமூர் கிராமத்திற்கு வந்தார். அவருடன் ஆதரவாளர்கள் சிலரும் வந்தனர். அப்போது தினகரன் வருகைக்கு பொதுமக்கள், மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர் அஞ்சலி செலுத்துவதில் சிறிது நேரம் தாமதம் ஏற்பட்டது.

இதனையடுத்து, அந்த இடத்தில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பொதுமக்களை சமாதானப்படுத்தி தினகரனை உடலுக்கு அருகில் அழைத்துச் சென்றார். அனிதாவுக்கு தினகரன் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, அவரை தொண்டர்கள் புடைசூழ திருமாவளவன் பத்திரமாக அனுப்பி வைத்தார்.