வெற்றிக் கூட்டணியை அமைப்பதில் ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது குறித்து கருத்து தெரிவித்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிகவிற்கு பக்குவம் இல்லை என்று விமர்சனம் செய்திருந்தார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா முதல்வர் கருத்துக்கு பதில் அளித்து பேசினார். அந்தப் பேட்டியில், “தேமுதிகவுக்கு பக்குவம் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். ஆனால், உண்மையில் ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இல்லை. கூட்டணியை வெற்றிக்கூட்டணியாக மாற்றக்கூடிய பக்குவம் அவருக்கு இல்லை.
நாங்கள் கூட்டணியை விட்டு விலகிவிடக்கூடாது என நினைத்தோம். அதனால்தான் அத்தனைமுறை பேச்சுவார்த்தையும் நடத்தினோம். மிகவும் பக்குவமாகத்தான் செயல்பட்டோம். ஆனால் அவர்கள் விடாப்பிடியாக 13 சீட்டுக்கள்தான் என உறுதியாக கூறிவிட்டனர். ஆனால் அதற்கு விஜயகாந்தும், மாவட்டச் செயலாளர்களும் ஒப்புக்கொள்ளவில்லை.
இதை தெளிவாக அதிமுக தலைமையிடம் எடுத்துக்கூறினோம். ஆனால் அவர்கள் அவ்வளவுதான். இல்லையென்றால் உங்களுக்கு தோன்றுவதை செய்யுங்கள் எனக்கூறினார்கள். அதனால் மிகவும் கனத்த இதயத்துடன் விஜயகாந்த் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பொய் புகார்களை கூறி அதிமுக எங்களை கூட்டணியில் இருந்து வெளியேற்றிவிட்டது.” என்றார்.
அத்துடன், தங்கள் கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் டிடிவி தினகரன் தான் என்றும் பிரேமலதா கூறினார்.