கராத்தே தியாகராஜன் பேச்சில் அறவே உடன்பாடு இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்டத் தலைவராக இருந்தவர் கராத்தே தியாகராஜன். இவரை காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டது. கட்சிக்கு எதிரான தொடர் நடவடிக்கை மற்றும் ஒழுங்கீனம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்து, திமுகவுடன் காங்கிரஸ் வைத்திருக்கும் கூட்டணிக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் இருந்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதைத்தொடர்ந்து கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சந்தித்தார். தனது ஆதரவாளர்களுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ப.சிதம்பரம் வீட்டிற்கு சென்ற கராத்தே தியாகராஜன் அவருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், கராத்தே தியாகராஜன் அண்மையில் பேசியது, அவர் அளித்த பேட்டி ஆகியவற்றில் தனக்கு அறவே உடன்பாடில்லை என ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், “திமுக-காங்கிரஸ் கூட்டணியின் நல்லுறவுக்கு அவை பாதகமானவை, அவை ஏற்புடையதல்ல என்பது என்னுடைய கருத்து. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரியைச் சந்தித்து கராத்தே தியாகராஜன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று அவரை அறிவுறுத்தியுள்ளேன்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.