நாளை நடைபெறவுள்ள குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கு ஓட்டுப் போட இன்று மாலை ஒத்திகை நடைபெற உள்ளது. இந்த ஒத்திகையில் பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளார்.
குடியரசு துணைக் தலைவர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி பிரதமர் மோடி, தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களையும், பாஜக வேட்பாளர் வெங்கய்யா நாயுடுவுக்கு வாக்களிக்க ஒப்புக் கொண்ட கட்சியின் எம்.பி.க்களையும் இன்று மாலை சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பு வழக்கமானதாக இல்லாமல், நாளை நடைபெறவுள்ள தேர்தலுக்கான ஒத்திகையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்முறையாக இப்படியொரு ஏற்பாட்டை மோடி செய்ததற்கு காரணம், குடியரசுத் தலைவர் தேர்தலில் 21 செல்லாத ஓட்டுகள் விழுந்தன. அவற்றுள் பெரும்பான்மையானவை பாஜகவினர் அளித்த ஓட்டுகளே ஆகும். இப்படியொரு தவறு மீண்டும் நடந்துவிடக் கூடாது என்பதில் பாஜக கவனமாக இருப்பதாக அக்கட்சியின் அலுவலக ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.
வாக்குச்சீட்டில், ஆளும் பாஜக வேட்பாளரான வெங்கய்யா நாயுடுவின் பெயரும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளரான கோபாலகிருஷ்ண காந்தியின் பெயரும் இடம்பெற்றிருக்கும். இந்த ஒத்திகை வாக்குப்பதிவில் பிரதமர் மோடியும் ஒரு எம்.பி.யாக வாக்களிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒத்திகை வாக்குப்பதிவுக்கு பிறகு கலைநிகழ்ச்சிகளும், இரவு விருந்தும் நடைபெறுகிறது. கலைநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டை மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா செய்கிறார்.