டிரெண்டிங்

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சட்டப்படி செல்லாது: ஆவுடையப்பன்

எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சட்டப்படி செல்லாது: ஆவுடையப்பன்

rajakannan

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் வராது என்றும் சட்டப்படி செல்லாது எனவும் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆவுடையப்பன் கூறுகையில், “இந்த 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் சட்டப்படி செல்லாது. இந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களும் எந்த கட்சியில் தேர்தலில் நின்றார்களோ, எந்த சின்னத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அதே கட்சியில் அதே சின்னத்தில்தான் இன்னும் இருக்கிறார்கள். கட்சி தாவல் தடை சட்டம் இதற்கு பொருந்தாது. உள்கட்சி பிரச்சனை காரணமாக நடவடிக்கை எடுத்துள்ளார்கள். எடப்பாடி அரசை காப்பாற்ற சபாநாயகர் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுள்ளார். 

நீதிமன்றத்திற்கு சென்றால் நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெறுவார்கள். இதற்கு உதாரணம் கர்நாடகாவில் எடியூரப்பாவிற்கு எதிராக செயல்பட்ட 7 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம்தான். உச்சநீதிமன்றத்தில் அந்த வழக்கு வந்த போது, எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது தவறு என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

கொறடா எந்த உத்தரவையும் இதுவரை பிறப்பிக்கவில்லை. அதற்கு எதிராக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் செயல்படவில்லை. கொறடா எந்த கட்சியில் உள்ளாரோ, அதே கட்சியில்தான் இவர்களும் இருக்கிறார்கள். கட்சி மாறிவிட்டோம் என்று சொன்னால்தான் நடவடிக்கை எடுக்க முடியும். எடப்பாடி பழனிசாமி தலைமை தேவையில்லை வேறு தலைமை வேண்டும் என்று கேட்டுள்ளனர். இது உள்கட்சி விவகாரத்தில்தான் வரும்” என்றார்.