டிரெண்டிங்

ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும்: ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் முறையீடு

ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும்: ஆளுநரிடம் மு.க.ஸ்டாலின் முறையீடு

Rasus

சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு குதிரை பேரத்தால் தான் வெற்றியடைந்தது. எனவே ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் முறையிட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை திமுக செயல் தலைவரும் சட்டபேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.கஸ்டாலின் இன்று சந்தித்தார். அப்போது துரைமுருகன், கே.ஆர்.ராமசாமி அபுபக்கர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், "கடந்த பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற போது ரகசிய வாக்கெடுப்பு நடத்த நாங்கள் கோரிக்கை வைத்தோம். ஆனால் சபாநாயகர் அதனை திட்டவட்டமாக மறுத்தார். குண்டுக்கட்டாக நாங்கள் வெளியேற்றப்பட்டோம். குதிரை பேரத்தால்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்ததாக அப்போதே ஆளுநரை சந்தித்து முறையிட்டோம். தற்போது தனியார் தொலைகாட்சி ஒன்று குதிரை பேரம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சட்டப்பேரவையில் நேரமில்லாத நேரத்தில் விவாதிக்க சபாநாயகரிடம் அனுமதி கோரினோம். ஆனால் அவர் அனுமதி மறுத்தார். ஆதாரம் கேட்டார். சி.டி-யாக ஆதாரத்தை கொடுத்தேன். நாளை பேரவை கூடும் போதுதான் சபாநாயகர் முடிவு குறித்து தெரியும்.

இதனிடையே, வீடியோ சர்ச்சை தொடர்பாக ஆளுநரை சந்தித்து முறையிட்டுள்ளோம். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். சட்டவிரோத பண பரிவரித்தனை குறித்து அமலாக்கத்துறை விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும். குதிரை பேரத்தால் தான் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு வெற்றி பெற்றிருக்கிறது. எனவே உடனடியாக ஆட்சியை கலைக்க வேண்டும் என ஆளுநரிடம் முறையிட்டுள்ளோம்" என்றார்.