மேட்டுப்பாளையத்தில் வாக்கு சேகரிப்பின் போது அதிமுக திமுகவினரிடையே தள்ளுமுள்ளு – திமுக பிரச்சார வாகனம் சேதம் – அதிமுகவினர் தாக்கியதாக திமுகவினர் நான்கு பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.கே.செல்வராஜ் போட்டியிடுகிறார். திமுக சார்பில் பிரபல தொழிலதிபர் டி.ஆர்.சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார். அதிமுக மற்றும் திமுக நேரிடையாக மோதும் இத்தொகுதியில் தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இரு வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான இன்று மேட்டுப்பாளையம் நகரத்தில் உள்ள தேவாலயத்தில் பிராத்தனை செய்து விட்டு வெளிவந்த கிறிஸ்துவ மக்களிடம் இரு தரப்பும் வாக்கு சேகரித்தனர். அப்போது பிரச்சார பாடல்களை ஒலிக்க விட்டபடி திமுகவின் மூன்று பிரச்சார வாகனங்கள் தேவாலையம் முன்பாக வந்து நின்றது. இதற்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வழிபாட்டு தளத்தின் முன்பாக பிரசார வாகனத்திற்கு அனுமதி இல்லாத நிலையில் இது குறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாகனத்தில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அதற்குள் இருதரப்பிற்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திமுகவின் பிரச்சார வாகனத்தில் இருந்த விளம்பர பேனர்கள் கிழிக்கப்பட்டது. இதனையடுத்து இரு தரப்பையும் சமாதானப்படுத்திய போலீசார் திமுகவின் மூன்று பிரச்சார வாகனத்தையும் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதனிடையே இப்பிரச்சனையின் போது அதிமுகவினர் தங்களை தாக்கி விட்டதாக கூறி திமுகவின் மேட்டுப்பாளையம் நகர செயலாளர் யூனிஸ் உள்பட நான்கு பேர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டனர்.
இச்சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தாக்குதலில் ஈடுபட்ட அதிமுகவினரை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.